வட இந்திய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளன. பல சரித்திர புகழ்பெற்ற கோட்டைகளையும், கோயில்களையும் கொண்ட மாநிலம்தான் ராஜஸ்தான். ராஜஸ்தானில் அமைந்துள்ள புஷ்கர் நகரத்தைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கவிருக்கிறோம்.
அஜ்மேரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் பாலைவன விளிம்பில் உள்ள அமைதியான நகர் புஷ்கர். இந்துக்களின் புனித யாத்திரைத் தலமான புஷ்கர் நகரம், அழகான புஷ்கர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
`நாக் பகாட்' அல்லது நாகமலை அஜ்மேருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை எல்லையாக இருக்கிறது.
புஷ்கர் ஏரியைப் பற்றி புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. யாகம் செய்வதற்கு உரிய இடம் ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாராம். அப்போது அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும், மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர்.
முப்புறமும் மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம். இவற்றில் முக்கியமானது பிரம்மா ஆலயம். நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
புனிதமாகக் கருதப்படும் புஷ்கர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுவார்கள்.
அமைதி தவழும் புஷ்கரில், அக்டோபர் - நவம்பர் மாதத்தில் வரும் கார்த்திகை பெளர்ணமி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகைப் பௌர்ணமி உற்சவத்தின் போது இந்த நகரமே விழாக் கோலம் பூணும். மக்கள் ஆரவாரம் அலைமோதும், பிரம்மாண்டமான கால் நடைச் சந்தையும் அப்போது நடைபெறுகிறது. இந்தப் புஷ்கர் விழாவின்போது வண்ண வண்ணக் கடைகள் புதிதாக தோன்றுகின்றன. இவைதான் உற்சவத்தின் முக்கிய நாயகமாக விளங்குகின்றன. இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் கண்களையும், காதுகளையும் குளிர்விக்கின்றன.
உற்சவத்தின் மற்றுமொரு அம்சமாக நாவில் நீர் ஊறச் செய்யும் பாரம்பரியத் திண்பண்டங்களும் விற்கப்படுகின்றன. வண்ண வண்ண உடைகள் அணிந்த கிராம மக்கள் விழாவுக்கு மெருகூட்டுகின்றனர்.
இந்த அழகான பின்னணியில், கவர்ச்சிகரமான பொம்மலாட்டம் உட்பட ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கால்நடைகள் ஏலம் விடப்படுவது, ஒட்டகப் பந்தயங்கள் ஆகியவை கொண்டாட்டங்களுக்குப் பொலிவூட்டுகின்றன.
புஷ்கரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்
பிரம்மா கோவில் : இந்தியாவில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோவில் இங்குதான் அமைந்துள்ளது. இந்த கோயில் செந்நிறத்தில் கூரான கோபுரத்தைக் கொண்டது. தலைவாசலில் பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது.
சாவித்திரி கோயில் : பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு என ஒரு கோயில் இங்குள்ளது. இது பிரம்மா கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமைந்துள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோயிலில் இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் காண்பது அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.
|