ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ரூ.1.21 கோடி நிதியுதவியுடன் மருத்துவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்த உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், டயாக்சின்-பாதரசம் ஆகிய நச்சுக் கழிவுகள் சுற்றுச்சூழலில் வெளியேறுவதைத் தவிர்த்தல் போன்றவை அடங்கும். தமிழகத்தில் மொத்தம் 18 அரசு-மாநகராட்சி மருத்துவமனைகள்-தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒரு பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் கண்டறியப்பட்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் அடங்கிய கருவிகளை படிப்படியாகக் குறைத்து, அதற்கு மாற்றான கருவிகளைப் பயன்படுத்த முயற்சி எடுக்கப்படும். மேலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கழிவுகளைப் கையால்பவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மூலம் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்த பட்டயப் படிப்பு, மருத்துவர்களுக்கும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சுற்றுச்சூழல், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு சுகாதாரத் துறை, ஜி.ஜே.மல்லிடிக்கிலேவ் ஆகியவை அண்மையில் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டம் மூன்றாண்டில் செயல்படுத்தப்பட்டு, மார்ச் 2012-க்குள் முடிக்கப்படும்.
|