| சேலம்: வரத்து குறைவால் வெல்லத்தின் விலை உயர்ந்துள்ளது; வெல்ல உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை, ஈரோடு மாவட்டம் சித்தோடு, கவுந்தபாடி, நாமக்கல் மாவட்டம் பீலிக்கல்பாளையம் ஆகிய இடங்களில், வெல்ல விற்பனை நடக்கிறது. இச்சந்தைகளில் வாரத்திற்கு, 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் மூடைகள் விற்பனைக்கு வரும். தற்போது, 50 ஆயிரம் மூடைகள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.இருப்பு வைக்கப்பட்ட வெல்லமும் விற்று, உடனடி உற்பத்தி வெல்லத்தை நம்பியே, வெல்ல மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. வெல்லத்தின் தேவை காரணமாக, சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை மாவட்டங்களில், வெல்ல உற்பத்தி இரவு பகலாக நடக்கிறது. இருப்பு வெல்ல விற்பனை மற்றும் வெல்லத்தின் வரத்து குறைவால், கடந்த பத்து நாட்களாக, தமிழகத்தின் வெல்ல மார்க்கெட்டில் வெல்லத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது.சேலத்தில் தினசரி சந்தைக்கு கடந்த இரண்டு மாதங்களாக, 170 டன் வந்து கொண்டிருந்த வெல்லத்தில் சரிவு ஏற்பட்டு, 90 டன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.வெல்லம் தட்டுப்பாடு காரணமாக, கடந்த மாதம் வரை, 30 கிலோ சிப்பம் 900 ரூபாய்க்கு விற்பனையான குண்டு வெல்லம் 240 ரூபாய் அதிகரித்து, 1,140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 850 ரூபாய்க்கு விற்ற அச்சுவெல்லம் 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மொத்த மார்க்கெட்டில் ஏற்பட்ட விலை உயர்வை அடுத்து, சில்லறை விற்பனை நிலையங்களிலும் விலை அதிகரித்துள்ளது. உருண்டை வெல்லம் கிலோ 42 ரூபாய்க்கும், அச்சுவெல்லம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெல்லத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், கருப்பட்டி கிலோவுக்கு 20 ரூபாய் சரிவு ஏற்பட்டு, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. |