நீலகிரி மாவட்டம் கோடநாடு பான்காடு பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களைத் திறந்து வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா, கூட்டுறவுத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா.நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பகுதியில் புதிய அடிப்படை வசதிகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:நீலகிரி மாவட்டம் பான்காடு பகுதியில் உள்ள துவக்கப் பள்ளி பழுதடைந்த நிலையில் செயல்பட்டு வந்தது.இதற்குப் பதிலாக புதிய பள்ளியை கட்டித் தர கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்தப் பள்ளியை கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் கட்டித் தந்துள்ளது. 7 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் இந்தப் பள்ளி கட்டப்பட்டுள்ளது.மேலும், பான்காடு பகுதியில் இயங்கி வந்த கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலை-ரேஷன் கடை கடந்த 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கடை 5 அடி பள்ளத்தில் அமைந்துள்ளதால் மேடான பகுதியில் புதிய கடையை கட்டித் தர அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் புதிய ரேஷன் கடையை கட்டித் தந்துள்ளது.இந்த புதிய பள்ளிக் கட்டடம் மற்றும் ரேஷன் கடை கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|