ராஜகுளம் இ-சேவை மையம். (வலது) இ-சேவை மையத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டணப் பட்டியல்.இ-சேவை மூலம் ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என 3 நிலை அதிகாரிகளை கடந்து வாங்க வேண்டும்.இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு அலைந்து திரிய வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்தது.அதாவது ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பிப்போர், முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று கடைசியில் வட்டாட்சியர் அலுவலத்தில் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரிடம் ஜாதி சான்றிதழ் வாங்க வேண்டும்.இதற்கு 3 நிலை அலுவலர்களுக்கும் குறைந்தது தலா ரூ. 200 வீதம் கையூட்டு வழங்க வேண்டும்.இது போன்ற சிக்கல்களை போக்கி, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், எளிதில் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க இ-சேவை மையத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராஜகுளம், மாகறல், ஆற்பாக்கம், களக்காட்டூர், வையாவூர், கீழ்பேரமநல்லூர், காவாந்தண்டலம் ஆகிய 7 இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் அரசு பொது இ-சேவை மையம் அமைக்க திட்டமிடப்பட்டது.ஒவ்வொரு இ-சேவை மையத்துக்கும் 2 பிர்க்கா வீதம் பிரிக்கப்பட்டது. அதாவது ஒரு மாணவனுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டும் என்றால், பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட இ-சேவை மையத்துக்கு ரேஷன் கார்டு, குறிப்பிட்ட பள்ளியில் படிப்பதற்கான பள்ளி அளிக்கும் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியனவற்றின் உண்மை நகலை கொண்டு செல்ல வேண்டும்.அங்கு ஒரு விண்ணப்பம் தரப்படும். அந்த விண்ணப்பத்தை நிரப்பி அதற்கான கட்டணத்தை சம்மந்தபட்ட இ-சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.அதன்பிறகு அங்கு அவர்கள் கொடுக்கும் தகவல்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.அதை கிராம நிர்வாக அலுவலர்கள் பார்வையிட்டு, அதன் உண்மை தன்மையை அறிந்து, வருவாய் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும்.அவர் அதை தாலுக்கா அலுவலகத்துக்கு அனுப்புவார். தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் ஆகியோர் உரிய சான்றில் கையொப்பமிட்டு மீண்டும் இ-சேவை மையத்துக்கு அனுப்புவர்.விண்ணப்பித்தோர் இ-சேவை மையத்துக்கு சென்று ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்தும் கணினியில் இணையதளம் மூலமே நடைபெறும்.ஆனால் முன்பு ஜாதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், குறைந்தது 3 நாள்களும், அதிகபட்சம் 6 நாள்களுக்குள்ளும் பெற்றுவிடலாம்.ஆனால் இப்போது நவீன முறையில் இணைய சேவை மூலம் பெறுவதற்கு குறைந்தது 15 நாள்கள் வரை இழுத்தடிக்கப்படுகிறது.ஏன் தாமதம்? பொது இ-சேவை மையத்தில் தமிழக அரசின் இணையதள சேவை வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த சேவை வாரத்தில் பல நாள்கள் வேலை செய்வதே இல்லை என்றக் குற்றச்சாட்டு உள்ளது.இதனால் குறிப்பிட்ட விண்ணபத்தை பெற்று பதிவேற்றம் செய்வதற்கு 3 நாள்கள், 4 நாள்கள் என்று அலைய வேண்டியுள்ளது.அதன் பிறகு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போதிய கணினிப் பயிற்சி இல்லாததால், அவர்களுக்கு வரும் விண்ணப்பங்களை மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவதில் காலதாமதம் செய்கின்றனர்.பிறகு வருவாய் அலுவலர்கள், என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதாவது இணைய தள வசதி மூலம் ஒரு சான்று பெற அதிகபட்சம் 3 நாள்கள் ஆகலாம், ஆனால் 10 முதல் 15 நாள்கள் வரை இழுத்தடிப்பதற்கு முன்பு போலவே வழங்கிவிடலாம்.மேலும் ஒரு சேவை மையத்துக்கு குறைந்தது 15 முதல் 25 கிராமங்கள் வரை பிரிக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் இதற்காக பல கி.மீ. தூரம் அலைந்து திரிந்து சேவை மையத்துக்கு வர வேண்டியுள்ளது.அவ்வாறு வரும்போது இணையதள சேவை இயங்கவில்லை என்றால், விண்ணப்பதாரர்கள் மீண்டும் மறுநாள் வரவேண்டும்.மீண்டும் சான்றிதழ் பெறுவதற்கு வரம்போதும் இதே நிலைதான். இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களது வேலைகளை கெடுத்துக் கொண்டு, அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இதில் சிக்கல் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிந்து உரிய தீர்வு கண்டால், இது போன்ற நல்லதிட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
|