சென்னை அருகேயுள்ள மெளலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா.சென்னை மௌலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மீட்புப் பணிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.இந்த விபத்தில் காயமடைந்து போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இதனிடையே இந்த கட்டட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை - மௌலிவாக்கத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 11 மாடி கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து தரைமட்டமானது. கட்டட இடிபாடுகளுக்குள் 72-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக கருதப்படுகிறது. அவர்களை மீட்க முழுவீச்சில் மீட்புப் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன. கொட்டும் மழையில் மீட்புப் பணி: இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். கிரேன், பொக்லைன், மோப்பநாய்கள் மூலம், நவீன கேமரா உள்ளிட்டவற்றின் உதவியுடன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்தக் கட்டட இடிபாடுகளை முழுவதுமாக அகற்ற ஓரிரு நாள்கள் ஆகும் என தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிகள் மீறல்: கட்டட விபத்து நடந்த இடத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மாலை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள அதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகள் விவரம் குறித்து கேட்டறிந்தார். மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ்விபத்துக்கு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் வதந்திதான். அவை விஷமத்தனமானவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை.விபத்துக்குள்ளான அடுக்குமாடி கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியதில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால், கட்டுமான நிறுவனம்தான் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. எந்தவிதமான விதிமீறல், அது எப்படி நடந்தது என்பதை தற்போது சொல்ல முடியாது. சரிந்து விழுந்த கட்டடம் மற்றும் அதன் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்ட இடத்தின் மண்ணின் தரம் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றார். நேரில் ஆறுதல்: பின்னர் அவர், இந்த விபத்தில் காயமடைந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் அவர் வழங்கினார். மீட்புப்பணிக்கு பாராட்டு: மீட்பு நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டு உயிருக்குப் போராடிய தொழிலாளர்களை மீட்ட காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில், தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்தார்.இதேபோல் கட்டட விபத்தில் உயிரிழந்த ஆந்திர தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளதாக நெல்லூர் மாவட்ட இணை ஆட்சியர் ரேகா ராணி தெரிவித்தார். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நேரில் ஆறுதல் கூற திங்கள்கிழமை முதல்வர் சந்திரபாபு நாயுடு வர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 6 பேர் கைது: இந்த விபத்து தொடர்பாக இதுவரை வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டடம் கட்டிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோகரன், அவரது மகன் முத்து ஆகியோரை போலீஸார் சம்பவம் நடந்த சனிக்கிழமையே கைது செய்து விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். அதைத் தொடர்ந்து கட்டடத்தின் பொறியாளர்கள் சங்கர், துரைசிங்கம் மற்றும் கட்டடத்தின் வடிவமைப்பாளர்கள் விஜய் பர்ஹோத்ரா, வெங்கட்சுப்பிரமணியம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவசர உதவி எண்: விபத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல் அறிய, தேசிய பேரிடர் மேலாண்மை ம
|