பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடக்கத்திலேயே அதிசயங்களை மக்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.கோவா தலைநகர் பனாஜியில் அந்த மாநில தொழில் மற்றும் வர்த்தக சபையின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் மனோகர் பாரிக்கர் பேசியதாவது:மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததும் நல்ல நாள்கள் வந்திருக்க வேண்டும். அவை வந்து விட்டனவா? என்று மக்கள் பலரும் கேட்கிறார்கள். அதற்கு நான் "நல்ல நாள்கள் இன்னும் வரவில்லை. விரைவில் வரும்' என்று பதிலளித்தேன்.முந்தைய மத்திய அரசு வேறு சிந்தனைகளைக் கொண்டிருந்ததுடன் அவர்கள் சில கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.ஆனால் தற்போதைய மத்திய அரசும், கோவா அரசும் ஒரே சிந்தனையைக் கொண்டுள்ளன. இதனால் இரு அரசுகளும் இணைந்து செயல்பட முடியும்.மோடி ஒருமுறை கோவா வந்தபோது "எந்தப் பிரச்னைகளை வலியுறுத்த விரும்புகிறீர்கள்?' என்று என்னிடம் கேட்டார்.அப்போது நான், மண்டோவி ஆற்றுப் பாலம் குறித்து வலியுறுத்தினேன்.கோவா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மோடியிடம் நான் வலியுறுத்தவில்லை.இதனால் ஊடகங்கள் என்னைக் கடுமையாக விமர்சித்தன. இன்னும் 4-5 மாதங்களில் கோவா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு விடும். அதற்குள் புதிய மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
|