ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றார்.பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தஉள்ளது.இதற்கான 49 மணி நேரகவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்குதொடங்கியது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.ராக்கெட்டில் உள்ள திரவ நிலை எரிபொருளை நிரப்பும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் 5 செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்டது.விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகள் மோதுவதை தவிர்ப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டதை விட மூன்று நிமிஷங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்பாட்-7 செயற்கைக்கோள்: பூமியைக் கண்காணிப்பதற்காக ஸ்பாட்-7 செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 714 கிலோ ஆகும். பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்டில் அனுப்பப்படும் 5 செயற்கைக்கோள்களில் இதுதான் அதிக எடை கொண்டது.கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக ஜெர்மனி நாட்டின் ஐசாட் செயற்கைக்கோளும், ஜி.பி.எஸ். அமைப்புக்கு உதவும் கனடா நாட்டின் என்எல்எஸ் 7.1 மற்றும் என்எல்எஸ் 7.2 ஆகிய செயற்கைக்கோள்களும், சென்சார் கருவியுடன் கூடிய சிங்கப்பூர் நாட்டின் வெலாக்ஸ்-1 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகின்றன.ஐசாட் 14 கிலோவும், என்எல்எஸ் 7.1, 7.2 ஆகியவை தலா 15 கிலோவும், வெலாக்ஸ் 7 கிலோவும் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும்.பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே வெளிநாடுகளைச் சேர்ந்த 35 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
|