ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் (வலது). இஸ்ரோவின் சாதனையை கைத்தட்டி வரவேற்கும் பிரதமர் மோடி.பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த ராக்கெட் தரையிலிருந்து புறப்பட்ட சுமார் 20 நிமிஷங்களில் பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 உள்ளிட்ட 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தியது.இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 660 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள் பூமியை வடக்கிலிருந்து தெற்காக சுற்றி வரும்.ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.ஸ்ரீஹரிகோட்டாவில் மேகமூட்டம்: ஸ்ரீஹரிகோட்டாவில் முந்தைய நாள் இரவு மழை பெய்ததால் திங்கள்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 49 மணி நேர கவுன்ட் டவுன் முடிவடைந்த பிறகு, சரியாக காலை 9.52 மணிக்கு 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்ட பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.மொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட் முதலில் பூமியைக் கண்காணிக்க உதவும். ஸ்பாட்-7 செயற்கைக்கோளை 660 கிலோமீட்டர் உயரம் கொண்ட புவி சுற்றுப்பாதையில் நிறுத்தியது. அதன் பிறகு, ஜெர்மனி நாட்டின் ஐசாட் செயற்கைக்கோள், கனடா நாட்டின் என்.எல்.எஸ். 7.1 மற்றும் என்.எல்.எஸ். 7.2 செயற்கைக்கோள்கள், சிங்கப்பூர் நாட்டின் வெலாக்ஸ்-1 செயற்கைக்கோள் ஆகியவற்றை திட்டமிட்ட பாதைகளில் செலுத்தியது. இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் நரேந்திர மோடி: இந்த ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு காலை 9.25 மணிக்கு வந்தார். அவருக்கு அருகில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் அலுவலகத்துக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றுகிறது: ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் மோடி பேசியது: நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மற்றுமொரு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்தியுள்ளனர். பூமியிலிருந்து 660 கிலோமீட்டர் உயரத்தில் 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மிகத் துல்லியமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் இதுவரை 67 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 19 நாடுகளைச் சேர்ந்த 40 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும். வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் நாடுகளின் செயற்கைக்கோள்கள் இங்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளன. விண்வெளித் துறையில் இந்தியாவின் வலிமையை உலகளவில் இது பறைசாற்றுகிறது, என்றார் அவர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் உள்ளிட்ட பிரமுகர்கள் பிரதமருடன் இருந்தனர். 5 செயற்கைக்கோள்கள்: விண்ணில் ஏவப்படும் 5 செயற்கைக்கோள்களில் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் மட்டுமே 714 கிலோ எடை கொண்டது. மீதமுள்ள செயற்கைக்கோள்கள் சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும். கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக ஜெர்மனி நாட்டின் ஐசாட் செயற்கைக்கோளும், ஜி.பி.எஸ். அமைப்புக்கு உதவும் கனடா நாட்டின் என்எல்எஸ் 7.1 மற்றும் என்எல்எஸ் 7.2 ஆகிய செயற்கைக்கோள்களும், சென்சார் கருவியுடன் கூடிய சிங்கப்பூர் நாட்டின் வெலாக்ஸ்-1 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகின்றன.ஐசாட் 14 கிலோவும், என்எல்எஸ் 7.1, 7.2 ஆகியவை தலா 15 கிலோவும், வெலாக்ஸ்-1 7 கிலோவும் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும்.பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே வெளிநாடுகளைச் சேர்ந்த 35 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
|