உளவு பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்றும், உளவுப் பணிகள் நடைபெற்றதா என்றும் அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருந்தால், அதனை கடும் கண்டனத்துக்குரிய செயலாக இந்தியா கருதுகிறது.பாஜகவை என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்த்ததாக செய்திகள் வெளியான விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக மூத்த அதிகாரிக்கு இந்தியா புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு நாட்டின் அரசு என்ற முறையில், இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே அமெரிக்க அரசுடன் அரசு பேசியுள்ளது. அப்போது இந்திய அரசு, இந்தியர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் தனிப்பட்ட நடவடிக்கையை உளவு பார்ப்பதற்கு அமெரிக்காவின் என்எஸ்ஏ அமைப்புக்கு அந்நாட்டு நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருப்பது குறித்து அமெரிக்காவிடம் மத்திய அரசு பிரச்னை எழுப்பியது.அதைத் தொடர்ந்து தற்போது, அதுபோன்று உளவு பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்றும், உளவுப் பணிகள் நடைபெற்றதா என்றும் அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருந்தால், அதனை கடும் கண்டனத்துக்குரிய செயலாக இந்தியா கருதுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திகளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என அமெரிக்கா உறுதி அளிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுள்ளது' என்றார்.இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக இருந்த நான்சி பாவெல் தனது பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான புதிய தூதரை அமெரிக்கா இன்னமும் நியமிக்காமல் உள்ளது. ஆகையால் தாற்காலிகத் தூதராக கேத்லீன் ஸ்டீபன்ஸ் என்பவர் உள்ளார்.இந்நிலையில் எந்த அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "தகவல் யாரிடம் தெரிவிக்கப்படுகிறது என்பது முக்கியமில்லை. ஆனால் இந்தியாவின் கருத்து அமெரிக்க அரசிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. அதற்கு அமெரிக்கா அளிக்கும் பதிலுக்காக காத்திருக்கிறோம்' என்று பதிலளித்தார்.பின்னணி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான "வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்ட செய்தியில், இந்திய அரசு மற்றும் பாஜகவின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்கு அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுப் புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு என்எஸ்ஏ அமைப்பு அனுமதி கோரியது. அதனையேற்று என்எஸ்ஏ அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.தனது செய்திக்கு ஆதாரமாக என்எஸ்ஏ அமைப்பின் முன்னாள் ஊழியரும், தற்போது ரஷியாவில் தலைமறைவாக இருப்பவருமான எட்வர்ட் ஸ்னோடென் அளித்த ஆவணங்களையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டிருந்தது.
|