சீனப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் சீன ராணுவ பயிற்சிக் கல்லூரியான தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் சென்று மாணவர்களை சந்தித்து உரையாடினார்.கடந்த 9 ஆண்டுகளில் சீனப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்திருக்கும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை அவர் சென்றார்.இந்திய-சீன உறவுகள், இரு நாட்டு ராணுவங்களிடையே உள்ள ஒப்பந்தங்கள் குறித்து அங்கு அவர் உரையாடினார்.21-ஆம் நூற்றாண்டில் ராணுவத் தலைமை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்துப் பேசிய தளபதி விக்ரம் சிங், இந்திய-சீன அரசியல் மற்றும் ராணுவ உறவு குறித்து மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.ஷாங்காய் நகரில் அமைந்திருக்கும் சீன கடற்படை தளத்துக்கு அவர் சனிக்கிழமை செல்கிறார். போர்க்கப்பலைப் பார்வையிடும் விக்ரம் சிங் அன்றிரவு இந்தியா திரும்புகிறார்.1962-ஆம் ஆண்டில் சீன ஊடுருவலுக்குப் பின், இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையேயான ராணுவ உறவில் பெரும் விரிசல் இருந்துவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இரு தரப்பினரிடையே பேச்சு மீண்டும் தொடங்கியது.
|