அரபிக் கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஜூலை 7) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சக் கட்டமான கத்திரி வெயில் மே 28-ஆம் தேதி முடிந்தது. கத்திரி வெயில் காலம் முடிந்தும், ஜூன் மாதம் இறுதி வரை, 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவாகியது.கடந்த வாரம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.காற்றழுத்த தாழ்வு நிலை: இந்நிலையில் அரபிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, கேரளம், லட்சத்தீவு, தெற்கு உள் கர்நாடகத்தில் அநேக இடங்களிலும், கடலோர கர்நாடகத்தில் பெரும்பாலான இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மேலும் தென் தமிழகம், ஆந்திரம், வடக்கு உள் கர்நாடகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யும்.மழை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 120 மி.மீ. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் 100 மி.மீ. கும்பகோணத்தில் 90 மி.மீ. நன்னிலம் மற்றும் ஈரோட்டில் தலா 80 மி.மீ. வலங்கைமான், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, வாணியம்பாடியில் தலா 70 மி.மி. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர், சோளிங்கரில் தலா 60 மி.மீ. மழை பெய்துள்ளது.அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் சனிக்கிழமை பல இடங்களில் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 1.5 மி.மீ. மீனம்பாக்கத்தில் 3.4 மி.மீ. மழை பெய்துள்ளது.வெயில்: தமிழகத்தில் அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் மற்றும் திருச்சியில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கரூர் பரமத்தி, சென்னை, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
|