இது தொடர்பாக காவிரி விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு மாநில அரசுகளுக்கும் நடுவர் மன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் "காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு புது தில்லி ஜன்பத்தில் உள்ள ஜன்பத் பவனின் ஐந்தாவது தள மகாதயி நீர் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்பாய அலுவலகத்தில் ஜூலை 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு காவிரி நடுவர் மன்றம் கூடவுள்ளது. எனவே, விசாரணைக்கு தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராக வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பை அளித்தது. அத் தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும் முறையிட்டிருந்தன.கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த மனுக்கள் நிலுவையில் இருந்தன. இந் நிலையில், நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி. சிங், 2012-ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பிறகு நடுவர் மன்றத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந் நிலையில், நடுவர் மன்றத் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பி.எஸ். சௌஹானை மத்திய அரசு கடந்த மே மாதம் நியமித்தது. இதையடுத்து, ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் தில்லியில் ஜூலை 15-ஆம் தேதி கூடவுள்ளது. இக் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் பெறுவது தொடர்பான கோரிக்கையை தமிழக அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடுவர் மன்ற பின்னணி: காவிரி விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் தொடர்ந்த வழக்குகளைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நடுவர் மன்றம் 1990-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக நீதிபதி என்.பி சிங், உறுப்பினர்களாக என்.எஸ். ராவ், சுதீர் நாராயண் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக விசாரணை நடத்திய நடுவர் மன்றம், 1991, ஜூன் 25-ஆம் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி வீதம் தண்ணீரை ஏக காலத்தில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியிருந்தது.உத்தரவில் அதிருப்தி: இந்த உத்தரவுக்கு கர்நாடகமும், தமிழகமும் ஆட்சேபம் தெரிவித்தன. இதையடுத்து, மத்திய அரசு தலையிட்டு, நீர்ப் பங்கீட்டு விவகாரத்தை கவனிக்க பிரதமர் தலைமையில் காவிரி ஆணையத்தை 2002-ஆம் ஆண்டில் அமைத்தது. அதற்கு உதவியாக மத்திய நீர் வளத் துறைச் செயலர் தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயி தலைமையிலான காவிரி ஆணையம், "காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.2007-இல் இறுதித் தீர்ப்பு: இந் நிலையில் காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி அளித்தது. அதில், தமிழகத்துக்கு மொத்தம் 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும். இதில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி நீரை மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டு ஒதுக்க வேண்டும். அந்த நீர் அளவில் புதுச்சேரிக்கு உரிய 7 டிஎம்சி நீரை தமிழகம் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், தீர்ப்பில் விளக்கம் கேட்டு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளும் நடுவர் மன்றத்தில் முறையிட்டன. ஆனால், அவை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
|