வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வே.க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசு சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாதந்தோறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.200-ம், பட்டதாரிகளுக்கு ரூ.300-ம் வழங்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.300-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375-ம், பட்டதாரிகளுக்கு ரூ.450-ம் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் 30.9.2014 உடன் முடிவடையும் காலாண்டிற்குத் தகுதியுள்ள வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவைத் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 30.9.2014 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரடியாகப் படித்து கொண்டிருக்கக் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராகவும், சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.
எந்த நிதியுதவியும் பெறுபவராகவும் இருக்கக் கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற உயர் தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித் தொகையை பெற இயலாது. உதவித் தொகையை பெற விரும்புவோர் விண்ணப்ப படிவங்களைப் பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கிய கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 28.8.2014 வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம்.
ஏற்கெனவே உதவித் தொகை பெற்று 3 ஆண்டு காலம் நிறைவு பெறாமல் 2014-15ம் நிதியாண்டிற்கு சுய உறுதி ஆவணம் அளிக்காதவர்கள் 28.8.2014-க்குள் சுய உறுதி ஆவணம் அளித்தால் தொடர்ந்து உதவித் தொகை பெறலாம்.
|