|
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தன் (வயது 24). அவருடைய நண்பர் பாலமுருகன் (26). ஆம்புலன்சு டிரைவர். நண்பர்கள் 2 பேரும் கடந்த 12-ந் தேதி அதே பகுதியில் உள்ள பாருக்கு மதுகுடிக்க ஒன்றாக சென்றார்கள். அப்போது அவர்களுக்கிடையே யார் அதிக அளவில் விடாமல் மது குடிப்பது என்பதில் போட்டி ஏற்பட்டது.
இதனால் ஆனந்தனும், பாலமுருகனும் அன்று காலை 11 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை விடாமல் மது குடித்தனர். அப்போது அளவுக்கு அதிகமான போதையில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதில் வலிப்பு நோய் ஏற்பட்டு ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.
இதைப்பார்த்த பாரில் இருந்தவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பாலமுருகனை ஆம்புலன்சு மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் அளிக்காமல் நேற்று காலை பாலமுருகன் செத்தார்.
இதுபற்றி பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பாலமுருகனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், கவுசிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
விபரீத விளையாட்டாக போட்டி போட்டு மதுகுடித்த நண்பர்கள் இருவரும் இறந்தது, அவர்கள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
|