|
சாயப்பட்டறைகளின் கழிவுகளை பூமிக்குள் வெட்டி வைத்துள்ளதால், கலங்கிய நிலையில் குடிநீர் வருவதால், பாதிக்கப்பட்ட மக்கள், டி.ஆர்.ஓ., கணேஷிடம் மனுக்கொடுத்து முறையிட்டனர்.சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் பகுதியில் அனுமதி இன்றி பல சாயப்பட்டறைகள் இயங்குகின்றன. அனுமதி பெற்று இயங்கும் ஒன்றிரண்டு சாயப்பட்டறைகளும், அதிகாரிகளுக்கு பணத்தை கொடுத்து, "0' டிஸ்சார்ஜ் செய்யாமல் கழிவுகளை வெளியேற்றுகின்றன.
இதனால், முகாசிபிடாரியூர், சின்னபிடாரியூர், முருகப்பாளையம், சக்தி நகர், கொத்தம்பாளையம், குளத்துப்பாளையம், மயிலாடி உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதே நிலை நீடிக்கிறது. இங்குள்ள பட்டறைகள், தங்களது கழிவுகளை இரவில் வெறியேற்றியும், பெரிய அளவில் குழிகள் வெட்டி, அதில் புதைத்தும் வைக்கின்றனர்.கடந்த ஒன்பது, பத்தாம் தேதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் சேர்ந்து, முகாசிபிடாரியூர் சானார் தோட்டம் என்ற இடத்தில் இருந்த சாயப்பட்டறையில் புதைத்து வைத்திருந்த, 100 டன் சாயக்கழிவை தோண்டி எடுத்துள்ளனர். இங்கு மேலும் பல, 100 டன் கழிவு உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு யூனிட்டிலும் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ளது. இவற்றால், குடிநீர், கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளிலும் கலங்கிய நிலையில், குடிக்க முடியாதபடி நீர் உள்ளது. விவசாயம் முழுமையாக பாதித்துள்ளது. கடந்த ஒன்பது, பத்தாம் தேதி இங்குள்ள கிணறு, குளங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீர் பரிசோதனை செய்தபோது, 6,600 டி.டி.எஸ்., அளவுக்கு கழிவு கலந்திருப்பது கண்டுபிடித்துள்ளனர்.இதுபற்றி புகார் செய்தாலும், சாயப்பட்டறைகளை அகற்றி, சாயக்கழிவை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும், சாயக்கழிவு சேராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என முறையிட்டனர்."நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க,' மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு, டி.ஆர்.ஓ., கணேஷ் உத்தரவிட்டார்.
|