|
மும்பை : வாங்கடே ஸ்டேடியத்துக்குள் நுழைய கொல்கத்தா அணி ஓனரும் பிரபல நடிகருமான ஷாருக் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த புதனன்று மும்பை , கொல்கத்தா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தின் முடிவில், வாங்கடே மைதானத்துக்குள் நுழைய முயன்ற ஷாருக்கானின் குழந்தைகள் மற்றும் அவர்களது நண்பர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். குழந்தைகளைப் பிடித்து தள்ளியதால் ஆத்திரம் அடைந்த ஷாருக் கான், பாதுகாவலர்கள் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அவர் குடித்திருந்ததாகவும், நிர்வாகிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும் போலீசில் எம்.சி.ஏ. நிர்வாகம் புகார் செய்தது. மேலும், வாங்கடே மைதானத்துக்குள் ஷாருக் நுழைய ஆயுள் தடை விதிக்கப் போவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் எம்.சி.ஏ. நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.ஏ. தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியதாவது: பாதுகாவலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஷாருக் முறைகேடாக நடந்து கொண்டதுடன், தரக்குறைவாகப் பேசி மிரட்டியுள்ளார். அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்காததுடன், அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கு ஆயுள் தடை விதிப்பது பற்றி தீவிரமாக ஆலோசித்தோம். வாங்கடே ஸ்டேடியத்துக்குள் நுழைய அவருக்கு 5 ஆண்டு தடை விதிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தேஷ்முக் கூறினார். இது பற்றி ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லாவிடம் கேட்டபோது, ‘ஐந்து ஆண்டு தடை விதிக்க வேண்டும் என்று எம்.சி.ஏ. பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும்’ என்றார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சர்ச்சையில், வாரியம் தலையிட்டு சமரசம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|