|
சென்னை: குரூப் 1 முதல் நிலை தேர்வில் 2,795 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மாநில அரசு மூலம் தேர்வு செய்யப்படும் உயர் பதவிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் துணை கலெக்டர் 56 (23 எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பின்னடைவு காலியிடங்கள்), டிஎஸ்பி 29, உதவி வணிக வரி அலுவலர் 28, மாவட்ட பதிவாளர் 7, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 10, கோட்ட தீயணைப்பு அலுவலர்1 ஆகிய 131 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி நடந்தது. இதற்கான ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி செயலாளர் உதயச்சந்திரன் கூறியதாவது: குருப் 1 முதல் நிலை தேர்வை சுமார் 90 ஆயிரம் பேர் எழுதினர். இதில், 2,795 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றோர் விவரம் ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ, ஷ்ஷ்ஷ். tஸீஜீsநீமீஜ்ணீனீs.ஸீமீt என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தேர்வாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்னர், மெயின் தேர்வு ஜூன் 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, ரிசல்ட் தாமதமாக வெளியிடப்பட்டதாலும், மாணவர்கள் படிக்க வசதியாகவும் மெயின் தேர்வு ஜூலை 28, 29ம் தேதிகளில் நடைபெறும். மெயின் தேர்வுக்கான ரிசல்ட் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். அதன் பின்னர் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு உதயச்சந்திரன் கூறினார். இதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி நடந்த ‘டைரி அசிஸ்டென்ட்‘ தேர்வு, மே 6ம் தேதி நடந்த லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு உதவியாளர் தேர்வு, செப்டம்பர் 25ம் தேதி நடந்த ‘லேபர் ஆபிசர்’ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகளையும் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
|