|
மயிலம்:தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை முதல்வர் ஜெ., தலைமையிலான அரசு ஒரே ஆண்டில் செய்துள்ளது என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நேற்று காலை நடந்த உழவர் பெருவிழாவில் தமிழக வணிகவரித் துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது:தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனைத்து வருவாய் கிராமங்களிலும் உழவர் பெருவிழா நடந்து வருகிறது. இதில் வேளாண் மைத் துறையின் சார்பில் விவசாய கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு வருகின்றன. விழாவில் விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் மான்யங்கள், கடனுதவிகள் குறித்து வேளாண்மை அலுவலர்கள் கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.
தற்போது தமிழக அரசின் சார்பில் சொட்டு நீர் பாசனத்திற்கு முழு மான்ய உதவியாக 1லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.ஐந்து ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை தற்போது தமிழக அரசு ஒரே ஆண்டில் செய்துள்ளது. தேர்தல் அறிக் கையில் அறிவித்தபடி இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்-டாப், விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள், விலையில்லா அரிசி ஆகியவைகள் வழங்கப்பட்டு வருகிறது.தானே புயலில் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெ., உத்தரவின்படி ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.
|