ரெய் மபோகி - ஜூலியோ சிஸார் - டிம் ஹோவர்டு - கிளெர்மோ ஒசாவ் - மானுவல் நோயர்
தனது நாட்டு அணியின் ஆட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ரசித்தபோதும், அமெரிக்க அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது.
அமெரிக்க அணிக்கு சிறந்த அரணாக கோல் கீப்பர் டிம் ஹோவர்டு செயல்பட்டபோதும், கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் வீரர்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியினால், தொடரிலிருந்து அமெரிக்க அணி வெளியேற நேரிட்டது.
பிரேசிலின் சால்வடரில் புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது. இத்தொடரின் கடைசி குரூப்-16 ஆட்டம் இதுவாகும்.
நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், பெல்ஜியம் வீரர்களின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது.
இதைத் தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த சுற்றில் அதிக வெற்றிகள் கூடுதல் நேரத்தில்தான் நிர்ணயிக்கப்பட்டது. அவ்வாறு நடைபெறுமா அல்லது பெனால்டி ஷூட் அவுட்டுக்கு ஆட்டம் செல்லுமா என்று இரு நாட்டு ரசிகர்களும் இருக்கையை விட்டு எழுந்து நின்றவாறு எதிர்பார்த்திருந்தனர்.
கூடுதல் நேரத்தின் 3ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு முதல் கோல் கிடைத்தது. அந்த அணியின் கெவின் டி பிரைய்ன் இந்த கோலை அடித்தார்.
இந்த முன்னணியால் பெல்ஜியம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டனர். தங்களது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பெல்ஜியத்துக்கு 105 நிமிடத்தில் ரோம்லு லுகாகுவினால் 2ஆவது கோல் கிடைத்தது.
ஆனால், ஆட்ட நேரம் மீதமிருந்ததால், அமெரிக்கர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருந்தனர்.
107ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் ஜூலியன் கிரீன் ஒரு கோல் அடித்தார். இதனால், ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் சென்று கொண்டிருந்தது. இருப்பினும் இறுதிவரை போராடியும் அமெரிக்காவினால் 2ஆவது கோல் அடிக்க முடியவில்லை. இதனால், பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
அந்த அணி, தனது காலிறுதிச் சுற்றில் ஆர்ஜெண்டினாவுடன் மோதுகிறது.
1986ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஆர்ஜெண்டினாவிடம் பெல்ஜியம் தோற்றது. அதற்கு இம்முறை தக்க பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பத்தை காத்து, வையத்தை ஈர்த்து...
இந்த உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி, நெய்மர், ராபின் வேன் பெர்ஸி போன்ற முன்கள வீரர்கள் கோல்கள் அடித்து பத்திரிகைகளின் முதல் மற்றும் விளையாட்டுப் பக்கத்தை அலங்கரித்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவின் டிம் ஹோவர்டு, மெக்ஸிகோவின் கிளெர்மோ ஒசாவ், பிரேசிலின் ஜூலியோ சிஸார், அல்ஜீரியாவின் ரெய் மபோகி ஆகிய கோல் கீப்பர்கள்தான் உண்மையில் கதாநாயகர்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஆட்டத்தில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துள்ளனர். பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மர் மற்றும் தியாகோ சில்வா கோல் கம்பத்துக்கு மிக அருகில் இருந்து தலையால் முட்டிய பந்தை தடுத்து கவனம் ஈர்த்தார் மெக்ஸிகோவின் கிளெர்மோ ஒசாவ்.
சிலிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டின்போது முதலிரண்டு கோல்களை பாய்ந்து தடுத்து ஆட்டத்தின் நாயகனாக விளங்கினார் பிரேசில் கோல் கீப்பர் ஜூலியா சிஸார். அதேபோல ஜெர்மனியின் தாமஸ் முல்லர், பிலிப் லாம் ஆகியோரை கோல் அடிக்க விடாமல் தடுத்து முடிந்தவரை வெற்றிக்குப் பாடுபட்டார் அல்ஜீரியா கோல் கீப்பர் ரெய் மபோகி. இந்த ஆட்டத்தில் அல்ஜீரியா தோல்வியடைந்தபோதிலும் ஆட்ட நாயகனாக மபோகி தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வே அவரது பெருமையை பறை சாற்றும்.
அதேபோல, ஜெர்மனியின் கோல் கீப்பர் மானுவல் நோயர் கோல் கீப்பர் பணி மட்டுமல்லாது பின்கள வீரர்களின் பணியையும் செய்தார். அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பெனால்டி ஏரியாவை விட்டு வெளியே வந்து பந்தைத் தடுத்து புருவம் உயர்த்த வைத்தார்.
இந்த வரிசையில் மேலும் ஒருவர் இணைந்துள்ளார். அவர் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டு. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெல்ஜியத்திடம் அமெரிக்கா தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் ஹோவர்டு தடுத்த கோல்களின் எண்ணிக்கை 16. 1966-ஆம் ஆண்டுக்குக்குப் பின் ஒரு கோல் கீப்பர் தடுத்த அதிக பட்ச கோல்கள் இதுவே என்கிறது புள்ளி விவரம். ஒருவேளை இவர் துடிப்புடன் செயல்படாவிட்டால் பெல்ஜியம் இன்னும் ஏராளமான கோல்களை அடித்திருக்கும் என்பதே நிதர்சனம்.
தோல்வியடைந்தாலும் அமெரிக்க கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்து விட்டார் ஹோவர்டு.
"டிம் ஹோவர்டு கோல்களைத் தடுத்த விதம் அசாதாரணமானது. அவர் ஆட்டத்தை இறுதி நிமிடம் வரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார்' என அமெரிக்க பயிற்சியாளர் கிளின்ஸ்மன் தெரிவித்தார்.
பெல்ஜியம்
|