Menu Left Menu Right
தமிழக செய்திகள்
பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்
Default



பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கல்லூரி சேர்க்கைக்கான கடிதங்களை வழங்க உள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் நடத்துகிறது. விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 23, 24-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஜூன் 25-இல் நடத்தப்பட்டது.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 29 நாள்கள் நடத்தப்பட உள்ளது. முதல் நாளான 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இறுதிச் சுற்று இரவு 7 மணிக்கு தொடங்கும். பி.இ. கட்-ஆஃப் 200-க்கு 200 பெற்றவர்கள் முதல், 198.75 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள் வரையில் 3 ஆயிரம் பேர் முதல்நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் நாளிலிருந்து முதல் சுற்று காலை 7 மணிக்குத் தொடங்கப்படும். பின்னர் 8.30, 10.00, 11.30, 1.00, 2.30, 4.00, 5.30, 7.00 மணி என 9 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்கள் அவர்களுடைய சுற்று தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக கலந்தாய்வு வளாகத்துக்கு வந்துவிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

எண்ணிக்கை அதிகரிப்பு: அகில இந்திய கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) 2014-15 கல்வியாண்டில் புதிதாக 7 பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளித்தது.

ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்ட சில கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்தது மற்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், குறிப்பிட்ட எண்ணிகையிலான இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைத்தது என்பன உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள மொத்த அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்கள் 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



சிறப்பு பஸ்கள் இயக்கம்



பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் வசதியாக சிறப்பு பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை முதல் 10 நிமிட இடைவெளியில் கோயம்பேடு-திருவான்மியூர் வழித்தடத்தில் வடபழனி, அசோக்பில்லர், சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் திங்கள்கிழமை முதல் கலந்தாய்வு முடிவு வரை இயக்கப்படும். அதே போல் பெருங்களத்தூரிலிருந்து காலை 5 மணி முதல் 21ஜி (பெருங்களத்தூர்-பிராட்வே) வழித்தடத்தில் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக 10 நிமிட இடைவெளியில் 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர ஏற்கெனவே தாம்பரம், கிண்டி, வடபழனி, சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தியாகராய நகர், திருவான்மியூர் போன்ற பகுதியிலிருந்து சுமார் 300 மாநகர பஸ்கள் அண்ணா பல்கலைக் கழகம் வழியாக இயக்கப்படுகின்றன என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!