"தென்மேற்கு பருவக்காற்று" படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்தவர் விஜய் சேதுபதி. அவர் ஹீரோவாக நடித்த முதல்படமே தேசிய விருது பெற்றது. தொடர்ந்து "பீட்சா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "சூது கவ்வும்" போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். இப்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...* தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களில் நடித்தது குறித்து?ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த வெற்றிகளுக்காக, என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அதே சமயம், வெற்றிகள் தொடர ஆசைப்படுகிறேன். அதற்காக, தொடர்ந்து கடுமையாக உழைக்கப் போகிறேன்.* ஆக்ஷன் கதைகளில் ஆர்வம் இல்லையா?"பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் படங்களைத் தொடர்ந்து "பண்ணையாரும் பத்மினியும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, சங்குதேவன், ரம்மி போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இதில், "பண்ணையாரும் பத்மினியும் உணர்ச்சி மயமான கதை. "சங்குதேவன் நீங்கள் கூறுவது போன்ற, அதிரடி ஆக்ஷன் படம். மற்ற படங்கள், காமெடி படங்கள். இதில் கிராமம், நகரம் என, இரண்டு விதமான கதைகளும் உண்டு.* நகரத்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறதே?நகரம், கிராமம் என்பதை தவிர்த்து, முதலில் கதைக்கு தான் முதலிடம் கொடுக்கிறேன். நல்ல கதை யார் கூறினாலும், அதை நான் தவற விடுவதில்லை.* உங்களின் வெற்றி, முன்னணி நடிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக...?அப்படியெல்லாம் இருக்காது. நான்கு படங்களில் தான் நடித்திருக்கிறேன். ரொம்ப சிறிய நடிகன். என்னைப் பார்த்து, யாரும் பயப்படமாட்டார்கள். நான்தான், அவர்களைப் பார்த்து பயப்படவேண்டும்.* புதிய இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடிப்பது ஏன்?என்னிடம், கதை கூறுவதற்கு, புதிய இயக்குனர்கள் தான் வருகின்றனர். அதில், பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். மற்றபடி, புதியவர்களின் இயக்கத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்பதில்லை. முன்னணி இயக்குனர்களின் பட வாய்ப்புகள் கிடைத்தாலும், கண்டிப்பாக நடிப்பேன்.
|