பெங்களூர்: பாஜகவிலிருந்து விலகி விலகி புதுக் கட்சி துவங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஊழல் புகாரில் சிக்கியதால், பாரதீய ஜனதா மேலிடம் அவரை பதவியில் இருந்து நீக்கியது. அவருக்கு பதிலாக சதானந்தா கவுடா முதல்வராக்கப்பட்டார்.ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்ற கட்சி மேலிடம் எடியூரப்பாவுக்கு உதவ வில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்கள் ஏதாவது புகார்களில் சிக்கிக் கொண்டால், அவர்களை காப்பாற்ற சோனியா காந்தி முயற்சி செய்வார். ஆனால், பாரதீய ஜனதாவில் அப்படி இல்லை. புகாரில் சிக்குபவர்களை ஒழித்துக்கட்ட பார்ப்பார்கள் என்று குற்றம் சாட்டினார்.எடியூரப்பா விவகாரத்தில் கட்சி மேலிடம் ஒதுங்கி இருப்பது, எடியூரப்பாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் இவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நான்கு மந்திரிகள், இவரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர். அப்போது, தன் மீது குற்றம் சாட்டிய கர்நாடக முதல்-மந்திரி சதானந்தா கவுடா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய எடியூரப்பா, அதை நிறைவேற்ற கட்சி மேலிடத்துக்கு காலக்கெடுவும் விதித்தார்.பின்னர், அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, அமைதியானார். எனினும், பாரதீய ஜனதா கட்சியில் தொடர்ந்து இருக்க, எடியூரப்பாவுக்கு விருப்பம் இல்லை. எனவே, தனிக்கட்சி தொடங்க எடியூரப்பா தீர்மானித்துள்ளார்.கட்சிக்கு கர்நாடக ஜனதா கட்சி என்று பெயர் சூட்டவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தனிக்கட்சி தொடங்குவதற்கு அச்சாரமாக, பெங்களூர் மல்லேஸ்வரத்தில், புதிய அலுவலகம் தொடங்கி உள்ளார். எடியூரப்பா ஆதரவு எம்.எல்.சி. ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த அலுவலகம் இயக்கப்பட்டுள்ளது.மேலும் ரேஸ்கோர்சில் உள்ள தனது இல்லத்தையும் வேறு இடத்துக்கு மாற்றி விட்டார். கர்நாடக சட்டசபை யில் 2004-ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும், 2006-ல் துணை முதல்வராக இருந்தபோதும், 2008-ல் முதல்வராக பதவி வகித்த போதும், எடியூரப்பா இந்த வீட்டில் தான் குடியிருந்து வந்தார்.புதிய அலுவலகத்துக்கு நேற்று எடியூரப்பா சென்று, பார்வையிட்டார். அங்கு தனது ஆதரவாளர்களை சந்தித்து தனிக்கட்சி தொடங்கும் திட்டம் பற்றி ஆலோசித்தார். தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பை எடியூரப்பா விரைவில் வெளியிடுவார் என்று, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.இதுபற்றி, மாநில பாரதீய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பாவிடம் கேட்ட போது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். 'அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும்' என்று முதல்-மந்திரி சதானந்தா கவுடா கூறினார். அதிருப்தி மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச, அருண்ஜெட்லி, தர்மேந்திர பிரதாபன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பெங்களூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
|