Menu Left Menu Right
மருத்துவம்
டெங்கு காய்ச்சல்
Default

மழைக்காலத்தில் நாம் கண்டு பயப்படும் இன்னொரு நோய் டெங்கு காய்ச்சல். அறுபதுகளின் துவக்கத்தில் ‘டிங்கி’ ஜுரம் என அறிமுகமான இந்நோய் வந்த சீசனில்தான் ‘‘ஸ்டவ் ஜோசியம்’’ என்பதும் அறிமுகமானது. ‘டிங்கி’ என்ற பெயரால் பல நகைச்சுவைத் துணுக்குகள் உருவாயின. ஆனால், அதன் சரியான பெயர் ‘டெங்கு’ என்பதே.

இந்நோய் ஏற்படக் காரணமாக உள்ளது டெங்கு நுண்ணியே. (நுண்ணி என்பது வைரஸ்தாங்க.... தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் நுண்கிருமி என்றால் பாக்டீரியா, அதிநுண்கிருமி என்பது வைரஸ் அதாவது நுண்ணி என்கிறார்கள்)

இவை ஊன்நீர் வகைகளாகப் (Serotypes) பிரித்தால் நான்கு வகைப்படும். அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அதைப் பிறகு சொல்கிறேன். இவை வயது, பால், இனம் ஆகிய வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் ஒன்றாகத் தாக்கும்.

இவற்றைப் பரப்பும் கொசுக்களை ‘ஈடஸ் ஈஜிப்டை’ என்கிறார்கள். இவை பகல் நேரத்தில் கடிப்பவை. அதனால் நமக்குத் தெரியும். மழை நீரில் அல்லது குளிர்சாதனப் பெட்டி (ரிஃபிரி ஜிரேட்டர்), ஏ.சி ஆகியவற்றில் தேங்கும் சிறிதளவு நீரில்கூட கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகிவிடும். நகர்ப்புறங்களில் சிறு பாத்திரங்களில் இவை பெருகி, நோயைப் பரப்புகின்றன.
சாதாரணமாக, மருத்துவர்களிடம் ஜுரம் என்று போனால் மழைக்காலத்தில் ‘‘இதெல்லாம் வைரஸ் ஃபீவர் (viral fever)’’ என்பார்கள். ‘‘அதுக்குப் போய் ‘டெஸ்ட்’ எல்லாம் பண்ண வேண்டாம்.... போய் மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க!’’ என்பார்கள்

அந்த ‘வைரஸ் ஃபீவர்’ தான் டெங்கு. பொதுவாக ஒரு நாள் காய்ச்சலுக்கே, என்ன சோதனை செய்யலாம் என வரைமுறைகள் உள்ளன. நம் ஊரில் ‘‘எதுக்கும் எல்லாம் பாத்துடலாமே, டாக்டர்’’ என்று நோயாளிகள் தாமே முடிவு செய்வது தவறு.

முதல் நாள் காய்ச்சலில் ஒரே ஒரு சோதனை போதும். (உச்சி முதல் பாதம் வரை மருத்துவர் சோதித்தாலே பல முறை காரணம் புரியலாம்). குளிர் அல்லது கடுமையான தலைவலி ஏற்பட்டால் மலேரியா உள்ளதா எனச் சோதிக்கலாம். அது ஒன்று மட்டுமே ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கக் கூடும்.

டெங்குதானா என உறுதி செய்வது, அவசியமற்றது. அதற்கென பணம் செலவழிப்பது வீண். ஏனெனில், டெங்கு காய்ச்சலுக்கென தனிப்பட்ட மருந்துகள் ஏதும் கிடையாது. வெறும் பக்கபலம் தரும் சிகிச்சை மட்டுமே போதும். மேலும் 15 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே _ அதிலும் 5% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே உயிருக்குத் தீங்கு ஏற்படும் அளவு பாதிப்பு ஏற்படலாம்.

நோய்க் குறிகள்:

1) நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்களிடம் ஏற்படுவதை (classic dengue) ‘‘முறையான டெங்கு’’ என்கிறார்கள். இந்நோய் வெளிநாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து தங்கும் இளவயதினரையும் குழந்தைகளையும் தாக்குவது. உடலில் நுண்ணி புகுந்து 5_8 நாட்கள் சும்மா இருந்து, பிறகு கண்ணீர்க் கசிவு, தடிமன் என வேலை காட்டும். இதற்குச் சில மணி நேரங்கள் கழித்து திடீரென உடம்பை முறிக்கும் வலி, கண்களின் பின்புறத்தில் வலி, பொறுக்க முடியாத தலைவலி மற்றும் கால், கை மூட்டுகளில் வலி ஆகியன ஏற்படும்.

உடல் அசைவினால் தலைவலி கூடும். சிலருக்கு வெளிச்சத்தையே பார்க்க முடியாத அளவு கண்கள் கூசலாம். உடல் நடுக்கமும் குளிரும் சற்று தாமதமாக வரலாம். இவை தவிர, தூக்கம் வராமலும், பசி இன்றி வாய் கசந்து போய், உடல் பலவீனம் அடைந்து அவதிப்படவும் நேரும். கால்வாசி பேருக்குத் தொண்டையிலும், மூக்கிலும் அழற்சி ஏற்படும்.

முக்கியமான விஷயம்: டெங்கு காய்ச்சலின்போது இருமல் மட்டும் வருவதே இல்லை.

மருத்துவச் சோதனையின் போது, கண்கோளங்களைத் தொட்டால் வலி ஏற்படுவது தெரியும். உடலில் ஆங்காங்கே நிணநீர் முண்டுகள் வீக்கமுற்றுக் காணப்படும்.

பாதி பேருக்கு, நாக்கின் பின்புறம் சிறிய வேர்க்குரு போன்ற குமிழ்கள் ஏற்படும். நாக்கின் மேல் மாவு போன்ற கோழைப் படிந்திருக்கும். மார்பிலும், கரங்களின் உட்பகுதிகளிலும் தோல் சிவந்து காணப்பட்டாலும், இவை சில நாட்களில் மறைந்து விடும். அதன்பிறகு, தடித்த அல்லது சிறு கொப்பளங்களோடு தோல் சிவக்கலாம். இவை 3_5 நாட்களில் தோன்றி, உடல் முழுவதும் பரவலாம்.

2_3 நாட்களில் காய்ச்சல் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிடக் கூடும். மற்ற நோய்க்குறிகள் அனைத்தும் மறைந்து போய் விடும்.

ஆனால், அனைத்துமே 2_3 நாட்களில் மறுபடியும் வந்து விடும்.

இது டெங்கு காய்ச்சலின் தனிப்பட்ட குணநலன் ஆகும்.

அதிர்ஷ்டவசமாக, இத்தகைய classic dengue அதிகம் காணப்படுவதில்லை. நோய்க்குப் பிறகு, பல வாரங்களுக்கு உடல் சோர்வு நீடிக்கும்.

2) இரண்டாவது வகை, சற்றுக் கடுமை குறைந்த நோய் வகையாகும். இதில் காய்ச்சல், பசியின்மை தலைவலி மற்றும் உடல்வலி ஆகியன இருக்கும். லேசான தோல் சிவத்தல் காணப்படும். நிணநீர் முண்டுகள் பாதிப்படைவதில்லை. 3 நாட்களில் உடல் முழுவதும் தேறிவிடும். (நம் ஊரில் காணும் ‘வைரஸ் ஃபீவர்’ இந்த வகையைச் சேர்ந்ததுதான்).

      
உங்கள் - கருத்து *
(Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
இ-மெயில் *
பெயர்*
சரிபார்ப்பு எண்* Numbers
மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும்.  வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Submit
 
 
 
 
Advertisements/Default.jpg
இதர மருத்துவ செய்திகள்
symbol முதுகுவலி வராமல் இருக்க - 1
symbol பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
symbol வெங்காய தொக்கு
symbol பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல