பிரேசிலியா: உலக கோப்பை காலிறுதி போட்டியில் இன்று அர்ஜென்டினா, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதில் மெஸ்சி, ஏஞ்சல் டி மரியாவை நம்பி களமிறங்கும் அர்ஜென்டினா சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் பங்கேற்ற 32 அணிகளில், லீக் மற்றும் ‘ரவுண்டு–16’ சுற்றுடன் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன.
இன்று நடக்கும் மூன்றாவது காலிறுதியில் கடந்த 1978, 1986ல் சாம்பியன் ஆன அர்ஜென்டினா அணி, பெல்ஜியத்தை சந்திக்கிறது.
லீக் சுற்றில் போஸ்னியா (2–1), ஈரான் (1–0) மற்றும் நைஜீரியாவை (3–2) வென்ற உற்சாகத்தில் இருந்த அர்ஜென்டினா அணிக்கு, ‘ரவுண்டு–16’ சுற்று சற்று தொல்லையானது.
போட்டியின் கூடுதல் நேரத்தில் தான் கோல் அடித்து வெற்றி பெற்றது. அதேநேரம், இத்தொடரில் பங்கேற்ற அணிகளில் அதிக நேரம் பந்தை தன்வசம் (64.3 சதவீதம்) வைத்திருந்த முதல் அணி அர்ஜென்டினா தான்.
இருப்பினும், கோல் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பது சிக்கல் தான். அணியின் தற்காப்பு பகுதியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது.
இத்தொடரில் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ள கேப்டன் மெஸ்சியுடன், ஏஞ்சல் டி மரியாவும் கோல் கணக்கை துவக்கியது நல்லது தான். அகுயரோ (காயம்), மார்கஸ் ரோஜோ(2 எல்லோ கார்டு) இன்று விளையாட முடியாதது பின்னடைவு. இதனால் மெஸ்சியை மட்டும் அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. காயத்தில் இருந்த மீண்ட ஹிகுவேன் உதவுவார் என நம்பலாம்.
பெல்ஜியம் எப்படி:
இத்தொடரின் ‘கறுப்புக்குதிரை’ என, கணிக்கப்பட்டது பெல்ஜியம். எதிர்பார்த்தது போலவே, லீக் போட்டிகளில அல்ஜீரியா (2–1), ரஷ்யா (1–0) மற்றும் தென் கொரியாவை (1–0) வீழ்த்தியது.
அடுத்து ‘ரவுண்டு–16’ சுற்றில் அமெரிக்காவை (2–1) கூடுதல் நேரத்தில் வென்றது. கடந்த 1986ல் 4வது இடம் பெற்ற இந்த அணி, இப்போது தான் காலிறுதிக்கு முன்னேறியது.
இருப்பினும், அணி எந்த ஒரு வீரரை மட்டும் சார்ந்து இருக்காமல் உள்ளது கூடுதல் பலம்.
இதுவரை அடித்த 6 கோல்களும், பெல்லெய்னி, மெர்டென்ஸ், இளம் வீரர் ஆரிஜி, வெர்டான்கென், புருனே மற்றும் லுகாகு என, 6 வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளன.
தவிர, இந்த கோல்கள் அனைத்துமே போட்டியின் 70 வது நிமிடத்துக்கு மேல் தான் அடிக்கப்பட்டன. இதனால் இன்று முன்னதாக கோல் அடிக்க முயற்சிக்கலாம்.
அதேநேரம், பெல்ஜியத்தை பொறுத்தவரையில் மெஸ்சியை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை பொறுத்து தான் வெற்றி பெறுவது குறித்து யோசிக்க முடியும்.
கடந்த 2006, 2010ல் காலிறுதியுடன் திரும்பிய அர்ஜென்டினா அணியும், இம்முறை எளிதில் விட்டுக் கொடுக்காது என்பது உறுதி.
பழிதீர்க்க வாய்ப்பு
கடந்த 1986 உலக கோப்பை தொடர் அரையிறுதியில், அர்ஜென்டினா, பெல்ஜியத்தை 2–0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியில் வென்று, பெல்ஜியம் பழிதீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
3
அர்ஜென்டினா, பெல்ஜியம் அணிகள் இதுவரை நான்கு முறை மோதின. இதில் அர்ஜென்டினா 3ல் வென்றது. பெல்ஜியம் 1ல் வெற்றி பெற்றது.
* உலக கோப்பை தொடரில் இரு அணிகள் இரு முறை மோதின. 1982ல் லீக் சுற்றில் பெல்ஜியம் 1–0 என, வென்றது. 1986 அரையிறுதியில் அர்ஜென்டினா (2–0) அசத்தியது.
10
இரு அணிகள் இடையிலான போட்டிகளில், அர்ஜென்டினா அணி இதுவரை 10 கோல்கள் அடித்துள்ளது. பெல்ஜியம் சார்பில் 4 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.
காலிறுதி போதுமா
கடந்த 1998ல் 1–2(நெதர்லாந்து), 2006ல் 2–4 (ஜெர்மனி), 2010ல் 0–4 (ஜெர்மனி) என, மூன்று தொடர்களிலும் காலிறுதியுடன்
வெளியேறியது அர்ஜென்டினா.
இதனால், இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என, பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
|